பகிர்தல்

உங்களுடன் பகிர சில பல உருப்படியான/ அல்லாத விஷயங்கள்

சாருவின் பாசாங்கற்ற வெளிப்படையான எழுத்துக்களை விரும்பிப் படிப்பவன் நான். அவருடைய முதல் "நாவலான எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ·பேன்சி பனியனும்" படித்த போது நாவலின் மரபை அநாயசமாக தாண்டிச் சென்றதோடு மற்றவர்கள் "தப்பு தப்பு" என்று கன்னத்தில் போட்டுக் கொள்கிற விஷயங்களை அங்கதத்துடன் பதிவு செய்திருந்ததால் மிகவும் பிடித்திருந்தது.
அவர் தொடர்ந்து எழுதிவரும் கோணல் பக்கங்களின் சமீபத்திய பதிவை பார்த்த போது சற்றே விநோதமாக இருந்தது. அவர், உயிர்மையில் பாகவதைரைப் பற்றியும் சின்னப்பாவைப் பற்றியும் எழுதி வரும் போதே எனக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது, பிலிம் நியூஸ் ஆனந்தனுடன் போட்டி போட முயல்கிறாரா என்று. ஏனெனில் இந்த மாதிரி கட்டுரைகளை எழுத நிறைய பேர் இருக்கிறார்கள். பிரத்யேகமான அயல்மொழி எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி (ப.சிங்காரம் என்கிற அற்புதமாக எழுத்தாளரை சாருவின் மூலமாகத்தான் கண்டு கொண்டேன்) அவர் எழுதியிருந்த கட்டுரைகளை தொடர்ந்து படித்திருந்தவன் என்கிற முறையில் இந்த சினிமாக் கட்டுரைகள் எனக்கு சாதாரணமாகவே பட்டது.

இப்போது சமீபத்திய கட்டுரைக்கு வருவோம். பாபாவின் படத்திலிருந்து விபூதி கொட்டுவதாகவும், பாபாவை காணச் சென்ற நண்பருக்கு தங்கச் சங்கிலி கிடைத்ததாகவும், இன்னும் பல பாபா... மகிமைகளை எழுதியிருந்தார். தங்கச் சங்கிலி வாங்க வேண்டுமென்றால் ஜி.ஆர்.டி.தங்கமாளிகைக்கு போனால் போதுமே, எதற்கு நள்ளிரவிலிருந்து கால் கடுக்க சிறுநீர் கூட கழிக்காமல் காத்திருக்க வேண்டுமென்று எனக்குப் புரியவில்லை. (ஜி.ஆர்.டியில் நகைக்கு காசு கேட்பார்களே, அதனால் இருக்குமோ?)
பொதுவாகவே தீவிரமாக நாத்திகம் பேசுபவர்கள், நாடி தளர்ந்த காலத்தில் ஆத்திகத்தின் பக்கம் சாய்ந்து விடுவதை காண முடிகிறது. சாருவும் அந்த திசையை நோக்கி போகிறாரோ என்னமோ? கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கிற கேள்விக்கு "இருக்கட்டும்" என்று யாரோ சொன்னார்கள். நானும் அந்தக் கட்சிதான்.

()

விஜய் டி.வியில் 25.02.07 (ஞாயிறு) காலை 11.00 மணிக்கு (இந்திய நேரப்படி) "நாளை" என்றொரு படம் திரையிடுகிறார்கள். இதுவரை பா¡க்கதாவர்கள், மனைவிக்கு சப்பாத்தி பிசைந்து கொடுத்து, துணிதுவைத்து, வீடு மெழுகி இன்னும் நேரம் மிச்சமிருக்கிற கனவான்கள் இந்தப் படத்தை முயற்சிக்கலாம். புதுமுக இயக்குநர் என்று அலட்சியமாக பார்த்த போது படத்தின் "டிரீட்மெண்ட்" என்னை கவர்ந்தது. இதில் நட்ராஜ் என்கிற ஆரம்ப கால ரஜினிகாந்த்தை நினைவுப்படுத்துகிற நடிகர், திறமையாக நடித்திருக்கிறார். பிறகு ஏன் காணாமற் போனார் என்று தெரியவில்லை.

நாளை, "நாளை" பாருங்கள்.

இந்தப் படத்தைப் பற்றிய பிரகாஷின் பழைய பதிவு.

()

மதூர் பண்டார்க்கரின் படங்கள் சில பார்த்திருக்கிறேன். சாந்தினிபார், page3, (கார்ப்பரேட் இன்னும் பார்க்கவில்லை) என்று எல்லாப் படங்களுமே ஜகஜ்ஜோதியான இந்தி சினிமாக்களிலிருந்து விலகி மாற்று முயற்சிகளில் இறங்கியிருப்பது போல் படும். இவரின் சமீபத்திய படமான Traffif Signal-ஐ இந்தி தெரியாததாலும் நேரம் கிடைக்காததாலும் பார்க்க முயற்சிக்கவில்லை. பார்த்தவர்கள் எப்படியிருக்கிறது என்று பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

காலச்சுமை - ராஜ்கெளதன்
தமிழனி பதிப்பகம், 332 பக்கங்கள், ரூ.120.

நவீன தமிழ் இலக்கியத்தில் சில முக்கியமான விமர்சன நூல்களை எழுதியிருக்கும் ராஜ்கெளதமனின் புனைவு இது. தன் சுய சரிதத்தையே புனைவாக மாற்றி பதிந்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. என்றாலும் புனைவுக்குரிய சுவாரசியம் குன்றாமல் அமைத்திருப்பது நன்று.
சிலுவைராஜூக்கு பாண்டிச்சேரி கல்லூரியில் உதவி பேராசிரியராக பணி நியமன உத்தரவு வருவதிலிருந்து இந்த நாவல் துவங்குகிறது.

பாண்டிச்சேரியின் சூழல், சிலுவைராஜின் திருமணம், உறவுகளுடன் அவனுக்கான மோதல்கள், பறையர் சாதி என்பதால் எதிர்கொள்ள நேரும் சமூக முரண்கள், கல்லூரி மாணவ அனுபவங்கள், வாடகை வீட்டுப் பிரச்சினைகள், இடமாற்றங்கள், குடிப்பழக்கம், இலக்கியம் மற்றும் நண்பர்கள், முனைவர் பட்டத்திற்காக அ.மாதவையா படைப்புகளின் மீதான ஆய்வு, வாழ்க்கையை எதிர்கொள்ள நேருகின்ற ஆயாசங்களில் நினைவு கூர்கிற தத்துவங்கள் என்று கலந்து கட்டி இந்த புனைவு அமைகிறது. பெரும்பாலும் பேச்சுத்தமிழிலேயும் அவ்வப்போது உரைநடையிலேயும் அமைந்திருக்கிறபடியால் வாசகனோடு நெருக்கமாக உறவாடுகிறது இந்த நாவல்.

"சிலுவைராஜ் சரித்திரம்" என்று முன்னமே வெளியாகியிருக்கிற புதினம், கல்லூரி வாழ்க்கையின் முன்பிருந்த பகுதிகளை சொல்கிறது என்று யூகிக்கிறேன். இந்த நாவலை படித்தவுடன் முதல் பகுதியை படிக்கிற ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

()

ஆல்·பா - டி.டி. ராமகிருஷ்ணன் (தமிழில் குறிஞ்சி வேலன்)
கிழக்கு பதிப்பகம், 136 பக்கங்கள், ரூ.50.

சாருநிவேதிதாவின் எழுத்துக்களை மலையாளத்தில் மொழி பெயர்த்து வழங்கிக் கொண்டிருக்கும் ராமகிருஷ்ணனின் மலையாள நாவல் குறிஞ்சிவேலனால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.
நாகரிகத்தின் உச்சியை அடைந்து விட்டதாக கூறிக் கொள்ளும் மனித இனம், மீண்டும் தன் வாழ்க்கையிலிருந்து பூஜ்யத்திலிருந்து, அதாவது கற்கால மனிதனாக, காட்டுவாசியாக ஆரம்பித்தால் எப்படியிருக்கும்? இப்படியான ஒரு கேள்வி மனிதவியல் ஆய்வாளரான உபலேந்து சட்டர்ஜிக்கு ஏற்பட, மிகுந்த திட்டமிடலுடன் ஒரு குழுவை ஏற்படுத்தி மனித வாடையே இல்லாத ஒரு தீவிற்கு செல்கிறார். தான் வந்த படகு உள்பட அனைத்துப் பொருட்களையும் அழித்து விட்டு நிர்வாணமாக காட்டுக்குள் நுழைகிறது அந்தக் குழு. உபலேந்துவின் திட்டப்படி, சரியாக 25 வருடங்கள் கழித்து ஒரு ஆராய்ச்சி மாணவர் அந்தக் காட்டை அணுகி, அவர்களிடம் எவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று ஆராய்வதற்கான முன்னேற்பாட்டையும் செய்து வைத்திருக்கிறார்.

1973 ஜனவரி ஒன்றில் ஆரம்பிக்கும் அத்தியாயம் சடாரென 25 வருடங்கள் தாவி நகர்கிறது. அவிநாஷ் என்பவர் இந்த திட்டத்தின் காரணகர்த்தாவான பானர்ஜியின் உத்தரவுப்படி அந்தத் தீவு மனிதர்களிடம் ஏற்பட்டிருக்கிற பரிணாம வளர்ச்சி குறித்து அறிவதற்காக புறப்படுகிறார்.

இவ்வாறு மிகச் சுவாரசியமான - ஒரு ஆங்கிலப்படத்திற்கு நிகரான - கதையுடன் துவங்குகிற படைப்பு, நாவலமைப்பு காரணமாக வாசிப்பதற்கு சோர்வை ஏற்படுத்துகிறது. பேராசிரியர் உபலேந்து சட்டர்ஜி உட்பட 13 பேர்கள் (அதில் 5 பெண்கள்) என்னவானார்கள் என்பதை நாவல் முன்னும் பின்னுமாக பல தர்க்கங்களுடனும் விவாதங்களுடன் நகர்கிறது. நகரத்திற்கு திரும்பி வருகிற மூன்று பேர் தங்கள் அனுபவங்களை விளக்கி விட்டு, பூமியின் நாராசங்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் திரும்பிச் செல்கின்றனர். ஒரு சுவாரசியமான ஆரம்பத்தை ஏற்படுத்தியிருக்கிற ஆசிரியர், இன்னும் கற்பனையை விரிவுபடுத்தி அந்த 13 பேருடனேயே நாவல் பயணிப்பதாக அமைத்திருந்தால் வாசிப்பனுபவத்திற்கு ஏற்புடையதாகயிருக்கும் என நம்புகிறேன்.


புதிய பார்வை என்றொரு இடைநிலை இதழ் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? புத்தகக் கடைகளில் சினிக்கூத்து, நக்கீரன், ஜீனியர் விகடன் போன்ற குப்பைகளில் மார்பை செயற்கையாக நிமிர்த்திக் காட்டிக் கொண்டிருக்கும் நடிகைகளின் புகைப்படங்களின் மத்தியில் உற்றுப் பார்த்தீர்களேயானால் (வரிகளின் இடையில் படிக்காமலிருக்க வேண்டுகிறேன்) இந்த புத்தகம் உங்களுக்கு தெரியக்கூடும். பாவை சந்திரனை ஆசிரியராகக் கொண்டு வந்துக் கொண்டிருந்த பத்திரிகை நடுவில் நின்று போய் மீண்டும் வெளிவர ஆரம்பித்து இரு வருடங்களிருக்கும். இப்போதைய இணைஆசிரியர் மணா. (இவர் குமுதம் தீராநதியில் ஆசிரியராக இருந்தவர்) ஆசிரியரைப் பற்றி கேட்காதீர்கள்.
Photobucket - Video and Image Hosting

"இப்போது அதுக்கு என்ன?" என்பவர்களுக்கு: பிப்ரவரி 16-28 2007 இதழை தவற விடாதீர்கள். ஏனெனில் இது பல சுவாரசியமான அபூர்வமான கட்டுரைகளுடன் சினிமா சிறப்பிதழாக மலர்ந்திருக்கிறது. .
* பெரியார் படம் இயக்கிய ஞானராஜசேகரனின் நேர்காணல் சுவையாக இருக்கிறது.

* "தமிழ் சினிமாவில் அரசியல்" என்று ஒரு கட்டுரையில் நிழல் "ப.திருநாவுக்கரசு" அபூர்வமான தகவல்களை தந்திருக்கிறார்.

* "சப்தங்களின் வழியே நிகழும் வன்முறை" என்கிற கட்டுரை, இன்றைய தமிழ்ச் சினிமாக்களின் ஒலி என்கிற கூறு பார்வையாளனை எவ்வாறு உளவியல் ரீதியாக பாதிக்கிறது என்பதை ஆழமாக ஆய்கிறது. இதை எழுதியவர் செழியன் (ஆனந்த விகடனில் உலக சினிமா பற்றி தொடர் எழுதுகிறவர்)

* "இன்றைய மலையாள சினிமா ஒர் அவசரக் காட்சி" - இந்த கட்டுரையை எழுதியவர் என்னுடைய ஆதர்ச கட்டுரையாளர்களில் ஒருவரான சுகுமாரன்.

இன்னும் சில கட்டுரைகளும், கால பைரவனின் சிறுகதையும் தவிர, காவிரி நதி நீர் பங்கீட்டு பிரச்சினை குறித்து ஆதியோடு அந்தமாக ஆராயும் ஒரு கட்டுரையும் வாசிக்க உகந்தது.

நான் சுரேஷ் கண்ணன். ஏற்கெனவே "பிச்சைப் பாத்திரம்" என்றொரு வலைப்பதிவில் எழுதி வருவது உங்களில் யாருக்காவது தெரிந்திருக்கலாம். இன்னொரு பதிவை ஆரம்பிக்க வேண்டுமென்கிற நீண்ட நாள் எண்ணத்தை இப்போதுதான் நிறைவேற்றி இருக்கிறேன். ஆரம்பித்த பதிவிலேயே இன்னும் ஒழுங்காக எதையும் எழுதிக் கிழித்து விட வில்லையே என்கிற சிலரின் முணுமுணுப்பு பலமாகவே என்னுள் கேட்கிறது. ஏனெனில் இது எனக்குள்ளும் எழுந்த கேள்விதான்.

நூல்கள் பற்றிய சிறு அறிமுகம், திரைப்பட மற்றும் இலக்கிய விழாக்கள் பற்றிய அறிவிப்பு, சில சுவாரசியமான செய்திகள், தொலைக்காட்சி நிகழச்சிகள் என்று என்னை கடந்து செல்கிற அனைத்தையும் பற்றி எழுத வேண்டுமென்று நினைத்து இத்தனை சிறிய பத்திக்கு ஒரு பதிவு அவசியமா என்று நினைத்து பல பதிவுகளை எழுதமாலேயே விட்டிருக்கிறேன். எனவே அவ்வாறான சிறிய பதிவுகளுக்கென்று ஒரு வலைப்பதிவு அவசியம் என்று எப்பவோ தோன்றியது இப்போதுதான் சாத்திமாயிற்று. சிறுநீர் கழித்து முடித்து விடும் நேரத்தில் ஒரு வலைப்பதிவை சொந்தமாக்கிக் கொள்ள முடியும்தான் என்றாலும் இது நீண்ட அவகாசம்தான் என்று எனக்கே தெரிகிறது.

உங்களிடம் நான் பகிர்ந்து கொள்ள நினைப்பதையெல்லாம் இங்கே காண முடியும். அவற்றை வரவேற்பதும் நிராகரிப்பதும் இனி உங்கள் கையில்.